கோவையில், 1,172 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு


கோவையில், 1,172 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 22 May 2019 4:00 AM IST (Updated: 22 May 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 1,172 தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.

கோவை,

கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் வாகனங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக கோவை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட 221 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 172 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. இதற்காக அந்த வாகனங்கள் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி மாவட்ட கலெக்டர் ராஜாமணி முன்னிலையில் தொடங்கியது. அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதற்காக போலீஸ், கல்வித்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் மூலம் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதல் உதவி பெட்டி, தீயணைப்புக் கருவி, அவசரக்கால வழி மற்றும் இருக்கை வசதிகள் உள்பட 21 பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சோதனையிடப்பட்டது. ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த வாகனம் திருப்பி அனுப்பப்படும். உரிய பழுதுகளை சரி செய்து இந்த குழுவில் காண்பித்த பின்னரே பள்ளி மாணவர்களை ஏற்றி வாகனம் அனுமதிக்கப்படும். ஆய்வுக்குழுவின் சோதனைக்கு பின்னர் சான்று பெற்ற பள்ளி வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் ஒவ்வொரு வாகனத்தையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், வாகன ஆய்வாளர்களும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கோட்ட வருவாய் அதிகாரி டெய்சி குமார்(வடக்கு), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பாஸ்கரன், குமரவேலு, மாவட்ட கல்வி அலுவலர் கீதா, கோவை மாவட்ட தீ தடுப்பு நிலைய அலுவலர் செல்வமோகன், போக்குவரத்து ஆய்வாளர்கள் அப்சல்கான், நிர்மலா தேவி, செந்தில், சரவணன், சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு புத்தகம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி வாகனங்களில் பிடித்த தீயை அணைப்பது எப்படி என்பது பற்றி டிரைவர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது. இதே போல பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்திலும் அந்தந்த பகுதி தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Next Story