தூத்துக்குடியில் 13 பேர் பலியான நினைவு தினம்: “ஓராண்டு ஆகியும் மறையாத நெஞ்சை உலுக்கிய துப்பாக்கி சத்தம்” - காயம் அடைந்தவர்கள் உருக்கமான பேட்டி


தூத்துக்குடியில் 13 பேர் பலியான நினைவு தினம்: “ஓராண்டு ஆகியும் மறையாத நெஞ்சை உலுக்கிய துப்பாக்கி சத்தம்” - காயம் அடைந்தவர்கள் உருக்கமான பேட்டி
x
தினத்தந்தி 22 May 2019 4:45 AM IST (Updated: 22 May 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

“தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டாகியும், நெஞ்சை உலுக்கிய அந்த துப்பாக்கி சத்தம் நினைவில் இருந்து மறையாமல் வடுவாக உள்ளது“ என்று துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் உருக்கமாக கூறினர்.

தூத்துக்குடி,

கடந்த ஆண்டு மே மாதம் 22-ந்தேதி முத்துநகரம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக மக்கள் அலை அலையாக குடும்பத்தோடு புறப்பட்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் கலெக்டர் அலுவலகம் சென்றபோது ஏற்பட்ட கலவரம் பெரும் துயரத்தை நோக்கி தூத்துக்குடியை அழைத்து சென்றது. ஆங்காங்கே போலீசார் துப்பாக்கி சுடும் சத்தம், ரத்த வெள்ளத்தில் மக்கள் சுருண்டு விழுந்தனர். பலர் ரத்தம் சொட்ட சொட்ட ஓடினர். தூத்துக்குடி நகரம் முழுவதும் கலவர பூமியாக காட்சி அளித்தது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். அவர்களுக்கு அரசு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்கியது. அதேபோன்று துப்பாக்கி சூடு, தடியடியில் மொத்தம் 118 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த 41 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்த 47 பேருக்கு தலா ரூ.1½ லட்சமும் அரசு நிவாரணம் வழங்கி உள்ளது. 22 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று உள்ளனர். ஆனால் அவர்களை அடையாளம் கண்டறிய முடியவில்லை. சிலர் அடையாளம் கண்டறியப்பட்டாலும், முகவரி மாறியதால், நிவாரணம் வழங்க முடியாத நிலை உள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 244 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் 277 பேரை போலீசார் கைது செய்தனர். சிலரை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்தனர். அதன்பிறகு அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கும், அதனை தொடர்ந்து சி.பி.ஐ.க்கும் மாற்றப்பட்டது. தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த சில நாட்களில் பதற்றம் தணிந்தது. 13 பேரை பலி கொண்ட இந்த சம்பவத்தின் நினைவு தினமும் இன்று (புதன்கிழமை). ஆனாலும் அந்த துப்பாக்கி சத்தம் இன்னும் நினைவில் இருந்து மறையாத வடுவாக உள்ளதாக துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் உருக்கமாக தெரிவித்தனர். இதுகுறித்து துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த கருணாநிதி நகரை சேர்ந்த மகராஜன் மகன் விஜயகுமார் (வயது 25) கூறியதாவது:-

நான் தூத்துக்குடியில் உள்ள தனியார் மணல் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த துப்பாக்கி சூட்டில் எனது வலது கால் தொடை பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த நான் ஓராண்டாக படுத்த படுக்கையாக இருந்தேன். அரசு தந்த ரூ.5 லட்சம் நிவாரணத்தொகைக்கு அதிகமாகவே எனது சிகிச்சைக்காக செலவு செய்து உள்ளோம். தற்போதுதான் நான் சற்று ‘வாக்கர்‘ மூலம் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

அந்த கோர துப்பாக்கி சூடு சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. கண் மூடி தூங்கினாலும் நினைவுக்கு வருகிறது. நெஞ்சை உலுக்கிய அந்த துப்பாக்கி சத்தம் நினைவில் இருந்து மறையாமல் வடுவாக உள்ளது. அரசு சார்பில் எனக்கு தலையாரி வேலை அளித்தனர். அந்த வேலையில் அலைந்து கொண்டே இருக்க வேண்டும். எனக்கு நடப்பதில் சிரமம் இருப்பதால், அமர்ந்து வேலை செய்யும் வகையில் அரசு ஏதேனும் பணியை வழங்கினால் நன்றாக இருக்கும். அதேபோன்று என்னை போன்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த தாளமுத்துநகர் கிழக்கு காமராஜ்நகரை சேர்ந்த ஞானமணி மகன் சேர்மராஜ் (24) கூறியதாவது:-

நான் ஒரு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்க சென்றபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் என்னை போன்று பலர் படுகாயம் அடைந்தனர். எனக்கு வலது கால் மூட்டு பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால் நான் கடந்த ஓராண்டாக நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் இதுவரை முழுமையாக குணமடையவில்லை.

கடந்த 29-1-19 அன்று எனக்கு நாகர்கோவிலில் வைத்து மீண்டும் ஒரு ஆபரேசன் நடந்தது. அப்போது, முதுகில் இருந்து எலும்பை எடுத்து மூட்டுப்பகுதியில் வைத்து ஆபரேசன் செய்து உள்ளனர். இது குணமாக தாமதம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். எனக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணமும், சமையல் உதவியாளர் வேலையும் தந்தனர். ஆனால் என்னால் அந்த வேலையை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் என்னை போன்று பலர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story