பெரம்பலூர், அரியலூரில் ராஜீவ்காந்தி நினைவுதின அமைதி ஊர்வலம்


பெரம்பலூர், அரியலூரில் ராஜீவ்காந்தி நினைவுதின அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 7:45 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் ராஜீவ்காந்தி நினைவுதின அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்,

பெரம்பலூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுதினம் மாவட்ட காங்கிரசார் சார்பில் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், அமைதி ஊர்வலமும் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பார்வையாளர் மணிரத்னம் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து அமைதி ஊர்வலம் ரோவர் நூற்றாண்டு வளைவு அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்று புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காமராஜர் சிலை அருகில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி நிர்வாகி காமராஜ், சேவாதள பொறுப்பாளர் சிவாஜி மூக்கன், சட்டப் பேரவை தொகுதி செயலாளர் செந்தில்குமார், முன்னாள் நகர தலைவர் பூபதி, தேனூர் கிருஷ்ணன் மற்றும் மகிளா காங்கிரஸ் உள்பட பல அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூரிலும் ராஜீவ்காந்தியின் நினைவுநாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காமராஜர் திடலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் சத்திரம், தேரடி, மார்க்கெட் தெரு வழியாக காமராஜர் சிலையை வந்தடைந்தது. பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

Next Story