சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில், நாளை ஓட்டு எண்ணிக்கை, ஏற்பாடுகள் தீவிரம்


சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில், நாளை ஓட்டு எண்ணிக்கை, ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 9:28 PM GMT)

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டுகள் சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகளை கலெக்டர் சி.கதிரவன் நேற்று பார்வையிட்டார்.

ஈரோடு,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இங்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ‘விவிபேட்’கருவிகள், கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் தொகுதி வாரியாக குறிப்பிடப்பட்ட கட்டிடங்களில் மூடி சீல் வைக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகளின் வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்ட கலெக்டரும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சி.கதிரவன் தினமும் வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார். 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் போடப்பட்டு இருந்ததால், அன்னியர்கள் உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலை இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது. சுமார் ஒரு மாத காலத்துக்கு பின்னர் நாளை (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன. நேற்று இறுதி கட்ட பயிற்சி மற்றும் பணிகள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கலெக்டர் சி.கதிரவன் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் உள்பட வாக்கு எண்ணும் பணிக்கான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஓட்டு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பணியையும் கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பாதுகாப்பு பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் மொத்தம் 1,678 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடந்தது. இந்த மையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 6 தொகுதிகள் வாரியாக வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாளை (வியாழக்கிழமை) வாக்கு எண்ணும் நேரம் தொடங்கியதும், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பகுதிக்கு கொண்டு வரப்படும்.

வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளன. ஓட்டுகள் எண்ணும் பகுதியில் 14 மேஜைகள் போடப்பட்டு இருக்கின்றன. இந்த மேஜைகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெறும். தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கை பணியில் தொகுதி வாரியாக தலா 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள், 17 நுண்பார்வையாளர்கள், 15 அலுவலக உதவியாளர்கள், 10 தொழில்நுட்ப உதவியாளர்கள் என 456 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 37 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை 24 சுற்றுகளாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேட்பாளருக்கு ஒரு முதன்மை முகவர், 16 முகவர்கள் என 6 சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 800 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே வாக்கு எண்ணும் மையத்தில் கடுமையான பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வாக்கு எண்ணும் மையத்தில் 100 கண்காணிப்பு கேமராக்கள், 96 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சட்டமன்ற தொகுதி வாரியாக வீடியோ பதிவாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 21 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 133 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 2 சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் இந்த பகுதிக்குள் கொண்டுவர அனுமதி இல்லை. அனுமதி பெற்ற 4 சக்கர வாகனங்கள் மட்டுமே உள்ளே வர முடியும்.

வாக்கு எண்ணும் மைய பகுதியில் மருத்துவக்குழுவினர், தீயணைப்பு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

Next Story