புதுச்சத்திரம் அருகே, சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொலை - மகனுக்கு வலைவீச்சு


புதுச்சத்திரம் அருகே, சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொலை - மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 9:37 PM GMT)

புதுச்சத்திரம் அருகே சொத்து தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலூர்,

புதுச்சத்திரம் அருகே சின்னாண்டிக்குழியை சேர்ந்தவர் வைத்தி மகன் ஜெயராமன் (வயது 70), விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா (60). இவர்களது மகன் பாலமுருகன் (43), கொத்தனார்.

இந்த நிலையில் பாலமுருகன், ஜெயராமனிடம் சொத்துக்கேட்டு வந்தார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினையின்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை சமாதானப் படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் சொத்து பிரச்சினை காரணமாக ஜெயராமனுக்கும், பாலமுருகனுக்கும் கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் கைக்கலப்பாக மாறியது. அப்போது பாலமுருகன் வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்து, தந்தை என்றுகூட பாராமல் ஜெயராமனை அடித்ததாக தெரிகிறது. இதை தடுத்த தாய் மல்லிகாவையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன், மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மல்லிகா பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந் தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மல்லிகாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த தகவலின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story