கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது
x
தினத்தந்தி 22 May 2019 12:30 AM GMT (Updated: 21 May 2019 9:38 PM GMT)

அம்பத்தூரில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது 3½ வயது மகனை பெற்ற தாய் அடித்து கொலை செய்தார். இதற்கு உடந்தையாக இருந்த கள்ளக் காதலனுடன் அவரும் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 26). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (21), இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கிஷோர் என்ற 3½ வயதில் ஒரு மகன் இருந்தான்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு, வ.உ.சி. நகரில் கள்ளக் காதலன் கார்த்திகேயன் (28), மற்றும் தனது மகன் கிஷோருடன் புவனேஸ்வரி வசித்து வந்தார். கார்த்திகேயன் பெயிண்டிங் காண்ட்ராக்டராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிஷோருக்கு காயமடைந்து விட்டதாகவும், திருவாரூருக்கு மகனை அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும், புவனேஸ்வரி அவரது தாயார் புஷ்பாவிடம் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன புஷ்பா, அவர்கள் திருவாரூர் வந்து சேர்ந்ததும் சென்று பார்த்தபோது கிஷோர் இறந்த நிலையில் கிடந்ததும், அவனது உடலை எரிப்பதற்கான செயலில் அவர்கள் ரகசியமாக ஈடுபட்டு கொண்டிருப்பதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் பதறிப்போன புஷ்பா, சந்தேகம் அடைந்து திருவாரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாய் புவனேஸ்வரி, கள்ளக்காதலன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் அம்பத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் இறந்து கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தார்.

விசாரணையில், கிஷோர் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததால் இறந்து விட்டதாக அவர்கள் போலீசில் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் இதுதொடர்பாக கார்த்திகேயன் மற்றும் புவனேஸ்வரியிடம் விசாரித்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகனை அடித்துக்கொலை செய்ததாக இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து 2 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதுகுறித்து புவனேஸ்வரி போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த சோமசுந்தரம் எனது தாய்மாமன் என்பதால் சிறு வயதிலேயே என்னை திருமணம் செய்து வைத்து விட்டனர். எங்களுக்கு கிஷோர் என்ற மகன் இருந்தான். சோமசுந்தரம் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் எங்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு சென்னை போரூர் பகுதியில் பெண்கள் மாநாட்டிற்கு வந்தேன். அங்கு திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை சந்தித்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த எனக்கு கார்த்திகேயன் ஆறுதலாக இருந்தார். இதனையடுத்து, திருவாரூரில் இருந்து மகன் கிஷோருடன் கிளம்பி சென்னை வந்து, அம்பத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கார்த்திகேயனுடன் வசித்து வந்தேன். கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த எங்களுக்கு கிஷோர் இடையூறாக இருந்தான். இதனால் கிஷோரை அடிக்கடி அடித்து, உதைத்து வந்தேன்.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி அன்று நாங்கள் ஒன்றாக இருந்த போது, கார்த்திகேயனை பார்த்து கிஷோர் அழுதான்.

இதனால் ஆத்திரமடைந்த நான், தோசை கரண்டியால் கிஷோரை ஓங்கி அடித்தேன். இதில் கிஷோருக்கு தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தான்.

இதைகண்டதும் பதறிப்போய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு பரிசோதனை செய்த டாக் டர்கள் கிஷோரின் நிலைமை மோசமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கிஷோரை கொண்டு செல்லும்போது, வழியிலேயே கிஷோர் இறந்துவிட்டான். இதன்பின்னரும், மருத்துவமனைக்குள் சென்றால் டாக்டர்கள் போலீசாரிடம் சொல்லி நம்மை சிக்க வைத்து விடுவார்கள் என்று பயந்து கிஷோரின் உடலை திருவாரூரில் யாருக்கும் தெரியாமல் எரித்து விடலாம் என கார்த்திகேயன் யோசனை தெரிவித்தார்.

இதனால், கீழ்ப்பாக்கத்தில் இருந்து கிஷோரின் உடலை திருவாரூருக்கு எடுத்துச்சென்றோம். இதற்கிடையில் எனது அம்மா புஷ்பாவிடம் கிஷோருக்கு காயம் ஏற்பட்டு விட்டது என்பதால் திருவாரூர் அழைத்து வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தேன்.

பின்னர் திருவாரூர் வந்தடைந்ததும், பேரன் கிஷோரை பார்த்ததும், என்னுடைய தாய் புஷ்பா கொலை செய்யப்பட்டதை தெரிந்து கொண்டு திருவாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் நாங்கள் போலீசிடம் மாட்டிக்கொண்டோம் என வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகனையே தாய் அடித்து கொன்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story