நினைவு நாள் அனுசரிப்பு ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


நினைவு நாள் அனுசரிப்பு ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 21 May 2019 10:07 PM GMT (Updated: 21 May 2019 10:07 PM GMT)

ராஜீவ்காந்தி நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு அரசு செயலாளர்கள் பிரசாந்த் குமார் பாண்டா, சரண், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் வினயராஜ், உதவி இயக்குனர் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதையொட்டி அங்கு மும்மத பிரார்த்தனை நடந்தது. ஜவகர் பால்பவன் ஆசிரியர்களின் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்பின் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தலைமையில் அதிகாரிகள் அனைவரும் வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர். இதன்பின் அங்கிருந்து மவுன ஊர்வலமாக சென்று ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் ராஜீவ்காந்தி நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரசார் 3 பஸ்களில் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பஸ்சில் ஸ்ரீபெரும் புதூருக்கு சென்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, நீல.கங்காதரன், தேவதாஸ், ஏ.கே.டி.ஆறுமுகம், வீரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சந்திப்பு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிரணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

Next Story