புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை


புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 22 May 2019 5:15 AM IST (Updated: 22 May 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

புதுச்சேரி,

புதுவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. புதுவை எம்.பி. தொகுதியில் மொத்தம் 9,73,161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7, 89,982 வாக்குகள் பதிவாகின. இது 82 சதவீதம் ஆகும்.

இடைத்தேர்தல் நடந்த தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 29,320 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 23,414 வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் 970 வாக்குச்சாவடிகளில் 2421 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1147 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1209 வி.வி.பாட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

புதுவை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுவையில் 2 மையங்களிலும், காரைக்காலில் 2 மையங்களிலும், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் தலா ஒரு மையம் என மொத்தம் 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 வி.வி.பாட் எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ண வேண்டும் என்பதால் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவுக்கு மேல் ஆகும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு வெளியில் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story