அரக்கோணம் நாடாளுமன்றம், 3 சட்டமன்ற இடைத்தேர்தல்: ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேஜைகள் வீதம் ஓட்டு எண்ணிக்கை


அரக்கோணம் நாடாளுமன்றம், 3 சட்டமன்ற இடைத்தேர்தல்: ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேஜைகள் வீதம் ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 22 May 2019 5:00 AM IST (Updated: 22 May 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் நாடாளுமன்றம் மற்றும் குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் சட்டமன்ற தொகுதிகளின் ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதி ஓட்டு எண்ணிக்கையும் 14 மேஜைகள் வீதம் நடக்கின்றன. அதிகபட்சமாக திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 24 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படுகிறது.

வேலூர்,

இந்தியா முழுவதும் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும், குடியாத்தம் (தனி), ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் ஓட்டுகள் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒவ்வொரு தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கும் 14 மேஜைகள் போடப்படுகிறது. அதில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஓட்டு எண்ணிக்கை சுற்றுகள் அமையும்.

குறிப்பாக ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 242 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பார்த்தால் இந்த தொகுதி ஓட்டு எண்ணிக்கை 18 சுற்றுகளாக நடக்கும். குடியாத்தம் தொகுதி ஓட்டு எண்ணிக்கை 21 சுற்றுகளாக இருக்கும். அதேபோன்று சோளிங்கர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை 22 சுற்றுகளாக நடக்கும்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் இந்த தொகுதியில் அடங்கி உள்ள திருத்தணி சட்டமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை 24 சுற்றுகளாகவும், அரக்கோணம் தொகுதியில் 18 சுற்றுகளாகவும், சோளிங்கர் தொகுதியில் 22 சுற்றுகளாகவும், காட்பாடி தொகுதியில் 18 சுற்றுகளாகவும், ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளில் தலா 21 சுற்றுகளாகவும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

ஓட்டு எண்ணும் பணியில் ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் உள்பட மொத்தம் 100 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஓட்டு வழக்கமாக தேனி மாவட்டத்தில் அதிகமாக இருக்கும் என்றும் இந்த தேர்தலில் வேலூர் மாவட்டத்தில்தான் ராணுவவீரர்களின் ஓட்டு அதிகமாக பதிவாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story