காங்கிரசுக்கு எதிராக ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பேசுவது சரியல்ல : தினேஷ் குண்டுராவ் பேட்டி


காங்கிரசுக்கு எதிராக ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பேசுவது சரியல்ல : தினேஷ் குண்டுராவ் பேட்டி
x
தினத்தந்தி 21 May 2019 11:20 PM GMT (Updated: 21 May 2019 11:20 PM GMT)

எங்கள் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், காங்கிரசுக்கு எதிராக ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பேசுவது சரியல்ல என்றும் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு, 

ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று பதிலளிக்கையில் கூறியதாவது:-

சிலரின் பொறுப்பற்ற பேச்சுக்கு பதிலளிக்க ேவண்டிய அவசியம் இல்லை. இன்னும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகவில்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அடிப்படையில் ரோஷன் பெய்க் குற்றம் சொல்வதும், கட்சிக்கு எதிராக பேசுவதும் சரியல்ல.

தேர்தல் முடிவு 23-ந் தேதி (அதாவது நாளை) வெளியாகிறது. முடிவு வெளியாகும் வரை அவர் இருந்திருக்க வேண்டும். கருத்து கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெறும்.

என்னை பற்றியும் அவர் குறை கூறியிருக்கிறார். காங்கிரஸ் தோல்வி அடைந்தால் நான் பொறுப்பேற்க தயாராக இருக்கிறேன். ரோஷன் பெய்க், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதெல்லாம், மந்திரியாக இருந்தார். பல்வேறு துறைகளை அவர் நிர்வகித்து இருக்கிறார்.

இப்போது கூட்டணி அரசில் தான் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அவா் சூழ்நிலையை புரிந்து கொண்டு பொறுமையாக இருந்திருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், கர்நாடகத்தில் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். பா.ஜனதாவினர் பிரச்சினை கிளப்பினால், ஆட்சியை தக்க வைக்க வேண்டிய வியூகங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

வீட்டு வசதித்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் கூறுகையில், “சித்தராமையா அரசில் ரோஷன் பெய்க் 5 ஆண்டுகள் மந்திரியாக இருந்தார். காங்கிரஸ் கட்சி அவரை 4, 5 முறை மந்திரியாக்கியது. இந்த முறை பிறருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இத்தனை ஆண்டுகாலம் அதிகாரத்தை அனுபவித்த அவர், இப்போது கட்சிக்கு எதிராக பேசுகிறார். இது சரியல்ல” என்றார்.

Next Story