மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி


மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 21 May 2019 11:27 PM GMT (Updated: 21 May 2019 11:27 PM GMT)

மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கா்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். அதோடு கட்சி தலைமைக்கும் எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரோஷன் பெய்க் மந்திரியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ரோஷன் பெய்க்கும் ஒருவர். தற்போதைய கூட்டணி அரசில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு அவர் கேட்டார். ஆனால் அவருக்கு பதிலாக ரிஸ்வான் ஹர்ஷத்துக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. இதனால் ரோஷன் பெய்க் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கருத்துகளை கூறியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் மந்திரி ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் உண்மையாகும். மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கருத்து கணிப்புகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

கர்நாடகத்திலும் கூட்டணி அரசு கவிழும் நிலைக்கு செல்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சித்தராமையா மற்றும் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தான் காரணம். சித்தராமையா ஆணவப்போக்குடன் நடந்துகொள்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 79 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்ததற்கு சித்தராமையாவின் மோசமான செயல்பாடே காரணம் ஆகும். லிங்காயத் சமூக பிரச்சினையில் அவர் தலையிட்டதே கட்சியின் பின்னடைவுக்கு காரணம் ஆகும். இதனால் காங்கிரஸ் 25 இடங்களை இழந்தது.

சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரசார் குமாரசாமியின் வீட்டுக்கு சென்று, கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்றும், முதல்-மந்திரி பதவியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினர்.

ஆனால் இப்போது சித்த ராமையா நானே முதல்-மந்திரி என்று கூறிக்கொண்டு சுற்றுகிறார். இது சரியல்ல. கட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. கிறிஸ்தவர்களுக்கு குறைந்தது 3 மந்திரி பதவிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கும் பதவிகள் கிடைக்கவில்லை.

மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் ஒரு கோமாளி (‘பபூன்’) போன்றவர். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அவரால் காங்கிரசுக்கு எந்த பயனும் இல்லை.”

இவ்வாறு ரோஷன் பெய்க் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மந்திரியும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ரோஷன் பெய்க், கட்சித்தலைமைக்கும், பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும் நேற்று பேட்டி அளித்தது காங்கிரசார் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கூட்டணி கட்சி தலைவர்களின் கருத்து மோதல்களால் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ள நிலையில் ரோஷன் பெய்க் பேட்டி கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரோஷன் பெய்க்கிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படியும் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story