மழைநீர் தேங்கும் இடங்களில் 323 மோட்டார் பம்புகள் : மும்பை மாநகராட்சி தகவல்
மும்பையில் தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 323 மோட்டார்பம்புகள் வைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பையில் அடுத்த மாதம் (ஜூன்) முதல் பருவமழை பெய்ய தொடங்கும். மழையின் போது நகரில் வெள்ளம் ஏற்படாமல் மழைநீர் விரைவாக வழிந்தோடுவதற்கு வசதியாக சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இருப்பினும் பருவமழையின் போது மும்பையின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகி விடுவது வழக்கம்.
இதன் காரணமாக நகரில் போக்குவரத்து உயிர்நாடியான ரெயில் சேவை பாதிப்பது மட்டுமின்றி சாலை போக்குவரத்தும் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படும்.
இந்த ஆண்டு மழைநீர் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் வெளியேற்ற வசதியாக மொத்தம் 323 மோட்டார் பம்புகள் வைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.
இந்த மோட்டார் பம்புகள் அதிகளவில் மழைநீர் தேங்கும் அந்தேரி, தகிசர், மலாடு, கார், கிங் சர்க்கிள், இந்துமாதா, பரேல் கிழக்கு, சயான் கோலிவாடா, தாராவி, சான்ட்ஹர்ஸ்ரோடு, வடலா, குர்லா எல்.பி.எஸ். சாலை, செம்பூர் போஸ்டல் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்படுகின்றன.
இதேபோல் மழையின் போது ரெயில் சேவை பாதிக்கப்படுவதை தடுக்க வெள்ளம் தேங்கும் ரெயில் நிலையங்களிலும் அதிக விசையுடன் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் மோட்டார் பம்புகள் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story