ஏர் பேக், பார்க்கிங் சென்சார் வசதியோடு வருகிறது ‘பொலேரோ’


ஏர் பேக், பார்க்கிங் சென்சார் வசதியோடு வருகிறது ‘பொலேரோ’
x

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எஸ்.யு.வி. மாடல் பொலேரோ.

பிரபலமான எஸ்.யு.வி. மாடல் பொலேரோ நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகிய மாடலும் இதுவே. நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும், நீண்ட தூர பயணம் மேற்கொள்வோரின் பிரதான தேர்வாக இருந்தது பொலேரோ. இந்த மாடலில் தற்போது பல்வேறு மேம்பட்ட அம்சங்களை இந்நிறுவனம் புகுத்தி வருகிறது.

குறிப்பாக 2020-ம் ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வர உள்ள பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர பாதுகாப்பு அம்சமாக டிரைவர் பக்கத்தில் ஏர் பேக் வசதி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ரியர் பார்க்கிங் சென்சார் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டிரைவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் பேக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் முந்தைய மாடல் ஸ்டீரிங் வீலை விட இதில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக டி.யு.வி. 300 மாடலில் உள்ள ஸ்டீரிங் வீல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீட் பெல்ட் மாட்டுவதை உணர்த்தும் கருவி, வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவையும் இதில் கூடுதலாக இடம்பெற்றுள்ள தனி அம்சங்களாகும்.

பின்புற பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை வலியுறுத்தும் வகையில் பின் இருக்கை பயணிகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாதது போலிருந்தாலும் விபத்து சோதனையில் பக்கவாட்டு சோதனை அவசியம் என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் வடிவமைப்பு மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிறப்பான ஆடியோ சிஸ்டம், மஹிந்திரா நிறுவனத்தின் எம்.ஹாக். டி.70 என்ஜின் இது 1.5 லிட்டர் டீசல் என்ஜினாகும். 70 ஹெச்.பி. திறன் மற்றும் 195 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. சமீபகாலமாக பல்வேறு மாடல் எஸ்.யு.வி.க்கள் வந்துள்ளதால், சந்தையில் பொலேரோ விற்பனை சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. புதிய மாற்றங்களுடன் வரும் இந்த எஸ்.யு.வி. மீண்டும் தனது முன்னிலையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story