முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 23 May 2019 4:30 AM IST (Updated: 22 May 2019 9:31 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 35), முன்னாள் ராணுவவீரர். இவர் மீது சத்துவாச்சாரி சாலை கங்கையம்மன் கோவில் தேரை தீ வைத்து எரித்தது, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது வெடிகுண்டு வீசியது உள்பட பல்வேறு வழக்குகள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திலும், கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் அவருடைய மாமனாரை கொலை செய்தது, அவரின் வீட்டுக்கு தீ வைத்தது உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன.

கடந்த மாதம் 20-ந் தேதி இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த செல்வராஜை சிலர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், ரவுடி வீச்சு தினேஷ் கூட்டாளிகளான சத்துவாச்சாரியை சேர்ந்த யுவராஜ் (23), பிரபு (22), கணேசன் (28) உள்பட 5 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ், பிரபு மீது பல்வேறு குற்ற வழக்குகள் வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி போலீஸ் நிலையங்களில் உள்ளன. தொடர்ந்து இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமனுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் யுவராஜ், பிரபு ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதற்கான ஆணையின் நகல் ஜெயிலில் இருக்கும் இருவரிடமும் போலீசார் நேற்று வழங்கினர்.

Next Story