மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 2½ பவுனுக்காக அடித்துக்கொன்று பெட்ரோல் ஊற்றி உடலை எரித்த கொடூரம் 4 பேர் கைது


மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 2½ பவுனுக்காக அடித்துக்கொன்று பெட்ரோல் ஊற்றி உடலை எரித்த கொடூரம் 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2019 3:45 AM IST (Updated: 23 May 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில், மூதாட்டி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2½ பவுன் நகைக்காக அவரை அடித்துக்கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக மூதாட்டியின் பேத்தி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு அருகில் கருவேலமர புதருக்குள் நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2½ பவுன் நகைக்காக மூதாட்டியை அடித்துக்கொன்று உடலை எரித்த கொடூரம் நடந்து உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

2½ பவுன் நகைக்காக அடித்துக்கொலை

தஞ்சை மாவட்டம் மதுக்கூரை அடுத்த புலவஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள்(வயது70). இவர் கடந்த 18-ந் தேதி மன்னார்குடி மதுக்கூர் ரோடு பகுதியில் உள்ள தனது பேத்தி சுமதி(20) வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் சொந்த ஊருக்கு திரும்பவில்லை. அவர், மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு அருகில் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மாரியம்மாளின் பேத்தி சுமதியின் கணவர் ஆறுமுகம்(24) மற்றும் அவரது உறவினர்கள் சிவக்குமார்(22), பெரியசாமி(20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மாரியம்மாளை அந்த பகுதியில் உள்ள கருவேலமர புதருக்குள் அழைத்துச்சென்று அங்கு வைத்து கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்று உள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை பறித்து உள்ளனர்.

பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு

பின்னர் பனைமர ஓலை மற்றும் பெட்ரோல் ஊற்றி மாரியம்மாளின் உடலை எரித்து உள்ளனர். இந்த கொலைக்கு மாரியம்மாளின் பேத்தி சுமதியும் உடந்தையாய் இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

பேத்தி உள்பட 4 பேர் கைது

இதனை அடுத்து சுமதி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் 4 பேரையும் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

2½ பவுன் நகைக்காக பேத்தியே உடந்தையாக இருந்து பாட்டியை கொலை செய்து எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story