பா.ஜனதா விருந்து; ரங்கசாமி புறக்கணிப்பு புதுவை அரசியலில் பரபரப்பு


பா.ஜனதா விருந்து; ரங்கசாமி புறக்கணிப்பு புதுவை அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 May 2019 4:30 AM IST (Updated: 23 May 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் பாரதீய ஜனதா அளித்த விருந்தை ரங்கசாமி புறக்கணித்தார். புதுவை அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, 

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியே மத்தியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கூட்டணி கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.

இதில் பங்கேற்க டெல்லிக்கு வருமாறு பா.ஜ.க. சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் பங்கேற்காமல் ரங்கசாமி புறக்கணித்தார். வழக்கம்போல் ரங்கசாமி தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமியார் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார்.

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பா.ஜ.க. அளித்த விருந்தை ரங்கசாமி புறக்கணித்தது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story