வீட்டின் முன் விளையாடிய 8 வயது சிறுமியை கடத்த முயற்சி பொதுமக்கள் திரண்டதால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்


வீட்டின் முன் விளையாடிய 8 வயது சிறுமியை கடத்த முயற்சி பொதுமக்கள் திரண்டதால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 23 May 2019 4:15 AM IST (Updated: 23 May 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

மாதவரத்தில் வீட்டின் முன் விளையாடிய 8 வயது சிறுமியை மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கடத்த முயற்சி செய்தனர். பொதுமக்கள் திரண்டதால் தப்பிச்சென்று விட்டனர்.

செங்குன்றம், 

சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் பிரிட்டிஷ்பாபு. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஹர்ஷினி(வயது 8). சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி விடுமுறை என்பதால் ஹர்ஷினி, மாதவரம் தணிகாசலம் நகர் பி பிளாக்கில் உள்ள தனது பெரியப்பா புண்ணியகோட்டி வீட்டுக்கு வந்து இருக்கிறாள்.

நேற்று முன்தினம் மாலை சிறுமி ஹர்ஷினி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், ஹர்ஷினியை தூக்கி, மோட்டார் சைக்கிளின் நடுவில் அமர வைத்து கடத்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் பயந்துபோன மர்மநபர்கள், சிறுமி ஹர்ஷினியை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து புண்ணியகோட்டி அளித்த புகாரின்பேரில் மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர்ஜவகர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்த முயன்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story