பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் குவிப்பு


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 8:19 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, குளித்தலை, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகள். இந்த பகுதிகளில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் வைக்கப்பட்டு, அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ளன. அதன்படி தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டு, அதனைத்தொடர்ந்து மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த வாக்கு எண்ணும் பணிகளில் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட நிலைகளில் 306 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. அவர்கள் ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விவரம் அறிவிப்பு பலகையில் எழுதுவார்கள்.

இவைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒலிப்பெருக்கியிலும் தெரிவிக்கப்படும். இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுடன் சரிபார்த்து எண்ணப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் அறைகள், கல்லூரி நுழைவு வாயில்கள் முழுவதும், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கான அறைகள் ஆகியவற்றை மொத்தம் 59 கண்கானிப்பு கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் குவிப்பு

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் சுற்றிலும், அந்த கல்லூரி நுழைவு வாயில் முதல் வாக்கு எண்ணும் மையம் வரை கம்புகளால் தடுப்புகள், இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி நுழைவு வாயில்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் அனைவரையும் போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். இன்று வாக்குகள் எண்ணப்படுவதையொட்டி வழக்கத்தை விட கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story