சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 23 May 2019 4:30 AM IST (Updated: 23 May 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உடையார்பாளையம்,

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு, வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறைகள் முழுவதுமாக கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளன.

வாக்கு எண்ணும் மையத் தை சுற்றிலும், அந்த கல்லூரி நுழைவு வாயில் முதல் வாக்கு எண்ணும் மையம் வரை கம்புகளால் தடுப்புகள், இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி நுழைவு வாயில்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் அனைவரையும் போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். ஏற்கனவே தேர்தல் அன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் கலவரம் ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 500-க்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story