ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: 7 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி நாமக்கல் கோர்ட்டு உத்தரவு


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: 7 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 May 2019 10:30 PM GMT (Updated: 22 May 2019 8:42 PM GMT)

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 7 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நாமக்கல் கோர்ட்டு உத்தரவிட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக 

குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 

சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை 

நடத்தி வருகின்றனர். அவர்களின் விசாரணையில் இதுவரை 

30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு 

இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப 

ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது 

கணவர் ரவிச்சந்திரன் உள்பட 10 பேர் இதுவரை கைது 

செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம் 

சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி சிறையில் 

அடைக்கப்பட்டு உள்ள அமுதவள்ளி, ரவிச்சந்திரன், டிரைவர் 

முருகேசன், செவிலியர் உதவியாளர் சாந்தி, அழகுகலை 

நிபுணர் ரேகா, அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார் மற்றும் 

புரோக்கர் லீலா ஆகிய 7 பேரையும் ஜாமீனில் 

விடுவிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில், 

அவர்களது சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் 

விசாரணைக்கு வந்தது. அப்போது கைதானவர்கள் தரப்பில் 

ஆஜராகி வாதிட்ட வக்கீல் ஜெயராஜ், ‘இந்த வழக்கில் கைது 

செய்யப்பட்டு உள்ள நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 

தங்களது காவலில் வைத்து விசாரணை நடத்தி முடித்து 

விட்டனர். எனவே அவர்களை ஜாமீனில் விடுவிக்க 

வேண்டும்’ என வாதாடினார். ஆனால் அரசு தரப்பில் 

ஆஜரான வக்கீல் தனசேகரன், அவர்கள் 7 பேருக்கும் ஜாமீன் 

வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.


இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி 

இளவழகன், குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதாகி 

சிறையில் இருக்கும் 7 பேரின் ஜாமீன் மனுக்களையும் 

தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.

இந்த வழக்கில் அமுதவள்ளி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் 

ஜாமீன் மனுக்கள் 2-வது முறையாகவும், புரோக்கர் லீலாவின் 

ஜாமீன் மனு 3-வது முறையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டு 

உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் நர்சு அமுதவள்ளியின் தம்பி நந்தகுமாரை 

நாமக்கல் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 

5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி 

வருகின்றனர். அவரிடம், குழந்தைகள் விற்பனை தொடர்பாக 

அமுதவள்ளிக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் உதவி 

செய்தீர்கள்?, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? 

என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி. 

போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் 

வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Next Story