நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு கலெக்டர் ஆசியா மரியம் பேட்டி
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்
இன்று (வியாழக்கிழமை) திருச்செங்கோடு விவேகானந்தா
என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதற்கான
முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி பலத்த
போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம்
நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்
எண்ணும் பணியில் நுண்பார்வையாளர்கள் உள்பட மொத்தம்
306 பேர் ஈடுகிறார்கள். இவர்களுக்கு எந்த சட்டமன்ற தொகுதி
வாக்குகளை எண்ண வேண்டும் என அறிவிக்கப்பட்டு
விட்டது. இருப்பினும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும்
வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.
இதில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் எந்த மேஜையில்
பணிஅமர்த்தப்படுவார்கள் என்பது நாளை (இன்று) குலுக்கல்
முறையில் தேர்வு செய்யப்படும். இதேபோல் ஒவ்வொரு
வேட்பாளர்களும் 16 முகவர்களை நியமிக்கலாம். அந்த
வகையில் இதுவரை 1,463 முகவர்களுக்கு அனுமதி அட்டை
வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் காலை 6.30
மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து விட
வேண்டும்.
சரியாக காலை 7 மணி அளவில் பாதுகாப்பு அறைகள் பொது
பார்வையாளர் வாணி மோகன் முன்னிலையில் திறக்கப்பட்டு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே
எடுக்கப்படும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகள்
எண்ணப்படும்.
ஒவ்வொரு சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
அறிவிக்கப்படும். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில்
பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், நாமக்கல் மற்றும்
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான
வாக்குகள் 21 சுற்றுகளாகவும், திருச்செங்கோடு,
பரமத்திவேலூர், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான
வாக்குகள் 19 சுற்றுகளாகவும் எண்ணப்படும்.
தபால் வாக்குகளை பொறுத்த வரையில் 3,275 வாக்குகள்
வந்து உள்ளன. இது 73 சதவீதம் ஆகும். இறுதியாக தேர்தல்
ஆணைய உத்தரவின்படி ஒவ்வொரு சட்டமன்ற
தொகுதிகளிலும் 5 ‘விவிபாட்’ எந்திரங்களில் உள்ள ஒப்புகை
சீட்டுகள் எண்ணப்படும். கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவான
வாக்குகளுக்கும், ‘விவிபாட்’ எந்திரத்தில் உள்ள ஒப்புகை
சீட்டுகளின் எண்ணிக்கையும் ஒப்பிட்டு பார்க்கப்படும்.
அப்போது வித்தியாசம் இருந்தால் ‘விவிபாட்’ எந்திரத்தில்
பதிவான வாக்குகளே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
செல்போனுக்கு அனுமதி இல்லை
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை
நடைபெறும் இடத்தில் 49 போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட உள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் மையத்திற்கு
வெளியேயும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு
உள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போனுக்கு
அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story