அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு சம்மன் அனுப்ப தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களை விசாரிக்க சம்மன் அனுப்ப தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? எனவும் கேள்வி எழுப்பியது. தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அங்குள்ள மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். கடந்த ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவில் 4 மாதத்திற்குள் இந்த வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அந்த அவகாசம் முடிவடைந்தும் இதுவரை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை இதுவரை சி.பி.ஐ. பதிவு செய்யவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த கோர்ட்டு, தனியார் ஓட்டலில் 22-ந்தேதி (அதாவது நேற்று) காலை 9 மணி முதல் 11 மணி வரை நினைவஞ்சலி கூட்டம் நடத்தவும், அதில் 500 பேர் பங்கேற்கவும் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் சிலருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரையும் விசாரணைக்கு ஆஜராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை கலெக்டர் ஆகியோர் சம்மன் அனுப்பி உள்ளனர். அதே போல சிலரிடம் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்யவும் கூறியுள்ளனர். இதுபோல சம்மன் அனுப்பி பொதுமக்களை தொந்தரவு செய்வது சட்டவிரோதமானது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “போராட்டம் என்பது அடிப்படை உரிமை. எனவே போலீசார் சட்டவிரோத கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று தான் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கும்பட்சத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களை மட்டும் துன்புறுத்துவது ஏன்? அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய சம்மன் மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது. புதிதாக யாருக்கும் சம்மன் அனுப்பக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story