சிங்காநல்லூர் அருகே, சிவில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
சிங்காநல்லூர் அருகே சிவில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிங்காநல்லூர்,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராமானுஜம் நகர் பங்காரு லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 37). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிவில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 14-ந் தேதி சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று அதிகாலை வீடு திரும்பினார்.
அப்போது அவருடைய வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன.
அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் விலையுயர்ந்த ஒரு மடிக்கணினி மற்றும் சில பொருட்கள் திருட்டுபோய் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அங்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர்.
அதுபோன்று மோப்பநாயும் அங்கு விரைந்து வந்து, சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
பங்காரு லே-அவுட் பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த வீடு தண்டவாளத்தின் ஓரத்தில் இருக்கிறது. இந்த தண்டவாளத்தின் மறுபுறத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு இரவில் எப்போதும் மதுபான பிரியர்கள் மதுவாங்கி குடித்துவிட்டு கும்மாளம் போடுவது வழக்கம்.
எனவே இரவு நேரத்தில் அங்கு வந்த மது பிரியர்கள், பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரத்தில் இங்கு வந்து சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன் திருட்டு ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறோம். அத்துடன் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story