ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 9:43 PM GMT)

ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது வறட்சி நிலவி வருவதால் பொதுமக்களுக்கு குறைந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் ஈரோடு அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் குறைவாக வினியோகம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து குடிநீரை பிடித்து செல்ல வேண்டி உள்ளது.

6 குடங்கள்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பு பிரிவுகளுக்கும் குறிப்பிட்ட நாட்கள் என்று பிரித்து வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கிறது. அதிலும் அதிகபட்சமாக 5 அல்லது 6 குடங்கள் மட்டும் குடிநீர் கிடைக்கும். இது ஒரு குடும்பத்தினருக்கு போதுமானதாக இல்லை.

எனவே அன்னை சத்யாநகர் பகுதியில் கூடுதல் நேரம் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story