சிவகாசி பஸ் நிலையத்தில், அடிப்படை வசதி இன்றி பயணிகள் அவதி


சிவகாசி பஸ் நிலையத்தில், அடிப்படை வசதி இன்றி பயணிகள் அவதி
x
தினத்தந்தி 22 May 2019 10:53 PM GMT (Updated: 22 May 2019 10:53 PM GMT)

குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிவகாசி பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

சிவகாசி,

தொழில் நகரமான சிவகாசி நகரின் மைய பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. போதிய இடவசதி இல்லாமல் இருந்த இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வைத்த தொடர் கோரிக்கை காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் நிலைய விரிவாக பணி தொடங்கப்பட்டது. தற்போது வரை அந்த பணி நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பஸ் நிலையத்துக்கு தினமும் 200-க்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுவதால் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சிவகாசி பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அமர போதிய இருக்கை வசதிகள் கிடையாது.

இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் பெண் பயணிகள் பஸ் நிலையத்தில் தனியாக நிற்கவே அச்சப்படுகிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் இருந்த உயர்கோபுர மின் விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த உயர்கோபுர மின் விளக்கு மீண்டும் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சிவகாசி பஸ் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயணிகளுக்கு இலவசமாக வழங்க பல லட்சம் ரூபாய் செலவு செய்து எந்திரம் பொருத்தப்பட்டது. இந்த எந்திரத்துக்கு தேவையான தண்ணீர் உரிய முறையில் சப்ளை செய்யப்பட்டது. நாளடைவில் அந்த எந்திரத்துக்கு தேவையான தண்ணீர் சப்ளை செய்யப்படாததால் தற்போது அந்த குடிநீர் தரும் எந்திரம் காட்சி பொருளாக இருக்கிறது. மேலும் அதே பகுதியில் அரசு சார்பில் அம்மா குடிநீர் விற்பனையகம் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த அம்மா குடிநீர் விற்பனையகம் தற்போது சில மணி நேரங்கள் மட்டுமே செயல்படுகிறது. போதிய குடிநீர் பாட்டில் சப்ளை இல்லாததால் 1 மணி நேரத்தில் குடிநீர் பாட்டில்கள் விற்பனையாகிவிடுவதாகவும், மற்ற நேரங்களில் குடிநீர் பாட்டில்கள் இல்லாமல் விற்பனையகம் மட்டும் திறந்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தநிலையில் பஸ் நிலையம் வரும் பயணிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் அமைப்பு சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தற்போது பயணிகளின் தாகம் தீர்க்கப்பட்டு வரு கிறது.

பஸ் நிலையத்துக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்கு, இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் இருப்பது பயணிகளை வேதனை அடைய செய்துள்ளது. பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக பஸ் நிலையத்தின் உள்ளே இருந்த 15 கடைகள் அகற்றப்பட்டன. அந்த கடைகள் மீண்டும் கட்டி கொடுக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான எவ்வித முயற்சியும் நகராட்சி நிர்வாகம் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பஸ் நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கடைகளும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

எனவே சிவகாசி நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையத்துக்கு நேரில் வந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story