முதுமலையில் வாகனங்களை சேதப்படுத்தும் குரங்குகள் - கடிக்க வருவதால் சுற்றுலா பயணிகள் அச்சம்
முதுமலையில் குரங்குகள் கூட்டமாக வந்து வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் அதனை விரட்ட முயலும் போது கடிக்க வருவதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. 688 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்ட வனத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், கரடிகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளும், சிறு வன உயிரினங்களும் வசித்து வருகின்றன. இதுதவிர 24 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகை தருகின்றனர்.
இதற்காக வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் வனத்துக்குள் அழைத்து செல்கின்றனர். மேலும் வளர்ப்பு யானைகள் மீது சுற்றுலா பயணிகள் சவாரி செய்கின்றனர். வனத்துக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். தற்போது மழை பெய்துள்ளதால் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இதனால் கோடை கால வெப்பத்தை தணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கார், மோட்டார் சைக்கிள், வேன்கள் என பல்வேறு வகையான வாகனங்களில் வருகின்றனர். முதுமலை தெப்பக்காடு பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு வனத்துறை வரவேற்பு அலுவலகம் மற்றும் முன்பதிவு மையத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். பின்னர் வாகன மற்றும் யானை சவாரி மூலம் வனத்துக்குள் சென்று திரும்புகின்றனர். இந்த சமயத்தில் முதுமலையில் நிறுத்தப்படும் வாகனங்களை குரங்குகள் கூட்டம் நகங்களால் சேதப்படுத்தி வருகிறது.
இதனால் மோட்டார் சைக்கிள்கள், கார்களின் இருக்கைகளை கடித்து குதறி விடுகிறது. வனவிலங்குகளையும், இயற்கை காட்சிகளையும் பார்த்து விட்டு வாகனங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குரங்குகளின் அட்டகாசத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். சில சமயங்களில் வாகனங்களின் ஒயர்களையும் அறுத்து விடுகிறது. இதனால் வனப்பகுதியில் வாகனங்களை இயக்க முடியாமல் நடுவழியில் குடும்பத்தினருடன் நின்று தவிக்கும் பரிதாப சூழல் காணப்படுகிறது.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- கோடை சுற்றுலாவுக்காக வந்து அனைத்து இடங்களையும் கண்டு ரசிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் சில தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டு வருகிறது. முதுமலை வனத்தையும், வனவிலங்குகளையும் பார்த்து விட்டு வந்த போது எங்களது வாகனங்களை குரங்குகள் கூட்டம் சேதப்படுத்தி வருகிறது. இதைக்கண்டு விரட்டும் பணியில் ஈடுபட்டால் கடிக்க வருகிறது. இதனால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தினாலும் பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story