பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை சில மணி நேரம் நிறுத்தம் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்


பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை சில மணி நேரம் நிறுத்தம் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 24 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு எந்திரம் மாறியதால் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். துணை ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

சென்னை,

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சென்னை ராணிமேரி கல்லூரியில் நடந்தது. 4-வது சுற்றின் போது, பெரம்பூர் இடைத்தேர்தலில் பதிவான மின்னணு எந்திரத்துக்கு பதிலாக வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான பெரம்பூர் தொகுதி மின்னணு எந்திரம் 6-வது மேஜையில் வைக்கப்பட்டது.

இதனால் அங்கிருந்த அரசியல் கட்சி முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெளியே காத்திருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் சாலைமறியல் போராட்டத்திலும் குதித்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்துக்கு விரைந்து வந்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. வாக்கு எந்திரம் மாறியதால் காலை 11 மணி முதல் மதியம் 1.20 மணி வரை வாக்கு எண்ணிக்கை தடைப்பட்டது. இந்தநிலையில் மதிய உணவு இடைவெளி முடிந்து 3 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. அப்போது பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்து வரப்பட்ட மின்னணு எந்திரங்களின் வரிசை எண் மாறி இருந்ததால் மீண்டும் பிரச்சினை எழுந்தது.

அ.தி.மு.க.வினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 3 மணி முதல் 4.40 மணி வரை இந்த பிரச்சினை நீடித்தது. போலீசாரும், துணை ராணுவ படையினரும் அதிகளவில் வாக்கு எண்ணும் மையத்தில் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட குளறுபடியால் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் விரக்தியில் வெளியேறினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்தது போன்று பெரம்பூர் இடைத்தேர்தலிலும் சூழ்ச்சி நடந்திருக்கிறது. மின்னணு எந்திரத்தில் குளறுபடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வினர்- அதிகாரிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டதால் ராணிமேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. வடசென்னை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் எந்திரம் குளறுபடி செய்ததால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை தடைப்பட்டது.

Next Story