தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்


தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 May 2019 11:30 PM GMT (Updated: 23 May 2019 7:54 PM GMT)

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவால் தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் அரங்கேறியது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் முடிவு முன்னணி நிலவரங்களில் பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்றதையடுத்து அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்வி முகத்தில் இருந்தாலும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்தனர்.

அங்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆடி-பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மோடி ‘கட்-அவுட்’ பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கு அனைவரும் லட்டு ஊட்டினர். இஸ்லாமியர் ஒருவரும் மோடி படத்துக்கு லட்டு ஊட்டினார். தப்பாட்ட கலைஞர்கள் மோடி போன்று முகமூடி அணிந்து இசை கருவிகளை இசைத்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை அ.தி.மு.க. சந்தித்தாலும், இடைத் தேர்தல் முடிவு அ.தி.மு.க. ஆட்சிக்கு சாதகமாக அமைந்ததால் அக்கட்சி தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து நீங்கியதையடுத்து, அக்கட்சி தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா உருவச்சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் அதிகளவில் திரண்டனர். மகளிரணியை சேர்ந்த பெண்கள் உற்சாக மிகுதியில் குத்தாட்டம் போட்டனர்.

சரவெடி பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தி.மு.க.வின் வெற்றியை கொண்டாடினர். பா.ம.க. தோல்வியை சந்தித்ததால் அக்கட்சியின் சின்னமான மாம்பழத்தை தி.மு.க. தொண்டர்கள் சிலர் கையால் நசுக்கி தூக்கி எறிந்தனர்.

தமிழகத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் மகுடம் சூடினாலும், மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் காங்கிரஸ் கட்சியினர் கவலை அடைந்தனர்.

இதனால் ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்திய மூர்த்திபவன் அலுவலகம் நேற்று காலையில் வெறிச்சோடி இருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலையில் சத்திய மூர்த்திபவன் அலுவலகத்துக்கு வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினர். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் தான் அனைத்துக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமாக அமைந்தது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அலுவலகங்களிலும் நடந்த கொண்டாட்டங்களை மக்கள் விசித்திரமாக பார்த்து சென்றனர்.

Next Story