திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெறிச்சோடிய வாக்கு எண்ணிக்கை மையம்


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெறிச்சோடிய வாக்கு எண்ணிக்கை மையம்
x
தினத்தந்தி 23 May 2019 10:30 PM GMT (Updated: 23 May 2019 8:32 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெற்றியை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் தவித்தனர்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் திருச்சி சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையையொட்டி கல்லூரி வளாகம் மற்றும் முன்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தபிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் முகவர்களை செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் பேனா, தீப்பெட்டி, லைட்டர் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. அதை வைத்திருந்தவர்களிடம் பறிமுதல் செய்து, அதன் பின்னரே அவர்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

வெறிச்சோடியது

இந்த நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் கல்லூரியின் முன்பாக காத்திருந்தனர். காலை 10.30 மணி அளவில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவு அறிவிக்கப்பட்டது. முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க.வேட்பாளர் இளங்கோவனைவிட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று இருந்தார்.

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட சுற்றுகளிலும் திருநாவுக்கரசரே முன்னிலை பெற்று வந்தார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் தவிர அ.தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க. தொண்டர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு, வழக்கமாக இருக்க கூடிய பரபரப்பை காணமுடியவில்லை. தொண்டர்கள் அனைவரும் கலைந்து சென்றதால் மதியம் 12 மணிக்கு மேல் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

வெற்றியை கொண்டாட முடியவில்லை

இது பற்றி அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அகில இந்திய அளவில் நிறைய இடங்களை கைப்பற்ற முடியாமல் தோல்வியை தழுவியுள்ளனர். தி.மு.க.வை பொருத்தவரை 37 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக்கூடிய அளவில் இடைத்தேர்தலில் அதிக தொகுதிகளில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. பாரதீய ஜனதா கட்சியை பொருத்தவரை அகில இந்திய அளவில் வெற்றி பெற்று இருந்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறமுடியவில்லை. அ.தி.மு.க. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. இதனால் தான் எந்த கட்சியினராலும் வெற்றியை கொண்டாடமுடியவில்லை. இதன்காரணமாகதான் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பகுதி வெறிச்சோடி காணப்பட்டு இருந்தது என்றனர். 

Next Story