நாடாளுமன்ற தேர்தல்: மராட்டிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி தோல்வி
மராட்டியத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா மடோங்கரும் தோல்வியை தழுவினார்.
மும்பை,
மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அபார வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கிய மாநில பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே, ஜல்னா தொகுதியிலும், மத்திய மந்திரி நிதின் கட்காரி நாக்பூர் தொகுதியிலும், மராட்டிய பா.ஜனதா மந்திரி கிரிஷ் பாபத் புனேயிலும் வெற்றி வாகை சூடினார்கள்.
பாராமதி தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, வட மத்திய மும்பை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரான மறைந்த மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் ஆகியோரும் மீண்டும் வெற்றி பெற்றனர்.
இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர் வடமும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். பிரசாரத்தின் போது பளிச்சிட்ட அவர், தேர்தல் முடிவில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோபால் ஷெட்டி எம்.பி. (பா.ஜனதா) மீண்டும் வெற்றி பெற்றார்.
நாந்தெட் தொகுதியில் எம்.பி.யாக இருந்த மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மீண்டும் போட்டியிட்டார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மராட்டிய சட்டமன்ற தேர்தலை குறிவைத்து, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயங்கினார். ஆனால் காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று மீண்டும் நாந்தெட் தொகுதியில் போட்டியிட்ட அசோக் சவான் தோல்வியை தழுவினார்.
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியுமான சுஷில்குமார் ஷிண்டே சோலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், இது தான் தனது கடைசி தேர்தல் என பிரசாரத்தின் போது உருக்கமாக தெரிவித்தார். ஆனாலும் அவர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இதேபோல மராட்டியத்தில் போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை தழுவ நேர்ந்தது. தென்மும்பை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரியும், மும்பை காங்கிரஸ் தலைவருமான மிலிந்த் தியோரா, வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், வட மத்திய மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் சஞ்சய் தத்தின் சகோதரி பிரியா தத் ஆகியோரும் தேர்தலில் தேர்ச்சி பெற முடியாமல் தோல்வி அடைந்தனர்.
Related Tags :
Next Story