திருவாடானை பாரதிநகரில், கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கம்


திருவாடானை பாரதிநகரில், கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கம்
x
தினத்தந்தி 24 May 2019 3:30 AM IST (Updated: 24 May 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை பாரதிநகரில் கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தார். அவரை காப்பாற்ற சென்ற தீயணைப்பு படைவீரரும் மயக்கம் அடைந்து பாதிக்கப்பட்டார்.

தொண்டி,

திருவாடானை பாரதிநகர் 5-வது வீதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ஆசிரியை சாந்தா. இவரது வீட்டில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த கிணற்றில் தூர்வாருவதற்காக நேற்று காலை இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த அருமைகொடி (வயது 61) மற்றும் சில தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அருமைகொடி இடுப்பில் கயிறை கட்டிக்கொண்டு 30 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் இறங்கினார். கீழே இறங்கியதும் திடீரென விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மயங்கினார்.

இதனை மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வீரர் ஆசைலிங்கம் கிணற்றுக்குள் இறங்கிய போது அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் அவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

உடனே தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் தண்ணீரை தெளித்து விஷவாயுவை கலைத்து விட்டு சாதுர்யமாக 2 பேரையும் மீட்டு உடனடியாக திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் காப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story