விழுப்புரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை, தபால் ஓட்டுகளை பிரிப்பதில் தாமதம்- மின்னணு எந்திரம் திடீர் பழுது
விழுப்புரத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகளை பிரிப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும், மின்னணு எந்திரம் திடீரென பழுதானதாலும் முன்னணி நிலவரம் அறியமுடியாமல் முகவர்கள், வேட்பாளர்கள், மக்கள் தவித்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,227 வாக்குச்சாவடி மையங்களில் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மாவட்டத்தில் 77.96 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 26 லட்சத்து 94 ஆயிரத்து 828 வாக்காளர்களில் 21 லட்சத்து 799 பேர் வாக்களித்தனர்.
இதில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் 1,723 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கணபதி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அன்பின்பொய்யாமொழி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதா, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கலியமூர்த்தி உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.
விழுப்புரம் தொகுதியை பொறுத்தவரை 7 லட்சத்து 20 ஆயிரத்து 770 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 22 ஆயிரத்து 481 பெண் வாக்காளர்களும், 185 திருநங்கைகளும் என மொத்தம் 14 லட்சத்து 43 ஆயிரத்து 436 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 606 ஆண்களும், 5 லட்சத்து 65 ஆயிரத்து 339 பெண்களும், 53 திருநங்கைகளும் ஆக மொத்தம் 11 லட்சத்து 28 ஆயிரத்து 998 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் 78.31 சதவீத வாக்குகள் பதிவாகியது.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகியுள்ள தபால் வாக்குகளை எண்ணுவதற்காக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. அதுபோல் நேற்று காலை 8 மணிக்குள் வரப்பெற்ற தபால் வாக்குகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு எண்ணும் பணி நடந்தது. இதற்காக 4 மேஜைகள் போடப்பட்டு காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள், தொகுதிகள் வாரியாக பிரிக்கப்பட்டு, எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளை எண்ணி முடிக்க 9.15 மணி ஆகி விட்டது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி தாமதமானது.
தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்று முடிவு 10.45 மணிக்குத்தான் தெரிவிக்கப்பட்டது.
முதல் சுற்றில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி 6-ம் எண் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு எண்ண முயன்றனர். அப்போது அந்த எந்திரம் திடீரென பழுதானது. உடனடியாக அங்கிருந்த தொழில்நுட்ப ஊழியர்கள், பழுதான வாக்குப்பதிவு எந்திரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 20 நிமிடத்திற்கு பிறகு வாக்குப்பதிவு எந்திரம் சரிசெய்யப்பட்டு, மீண்டும் வாக்கு எண்ணப்பட்டது.
இவ்வாறு தபால் ஓட்டுகளை பிரித்து எண்ணுவதற்கு நீண்ட நேரம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் திடீர் பழுது போன்ற காரணத்தால் முன்னணி நிலவரம் பற்றி அறிய முடியாமல் வேட்பாளர்கள், முகவர்கள், மக்கள் தவித்தனர். இதன் காரணமாக அடுத்தடுத்த சுற்று வாக்குகள் எண்ணிக்கை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்து 14 முதல் 22 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருந்தனர். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் எந்திரங்களின் எண், ஒப்புகைச்சீட்டு எந்திரங்களின் எண் ஆகியவற்றை காண்பித்த பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இப்பணியில் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அவர்கள், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு பென்சில், பேப்பர் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார், தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். ஓட்டுகள் எண்ணப்பட்டு சுற்றுகள் வாரியாக வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் மேஜை வாரியாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு சுற்று முடிவிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்கள் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டது. இதுதவிர சுற்றுகள் வாரியாக பெற்ற வாக்குகள் விவரம் அடங்கிய நகல் அந்தந்த வேட்பாளர்களுக்கும், அவர்களுடைய முகவர்களுக்கும் வழங்கப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச்சீட்டு எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் ஒரு சட்டமன்றத்திற்கு 5 ஒப்புகைச்சீட்டு எந்திரம் (வி.வி.பேட்) என்ற வகையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 30 வி.வி.பேட் எந்திரங்களில் உள்ள சீட்டுகளும் எண்ணப்பட்டது.
ஒவ்வொரு வி.வி.பேட் எந்திரத்திற்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங் களில் உள்ள வாக்குகளை எண்ணிவிட்டு கடைசியில் வி.வி.பேட் எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்பட்டன. இதனால் வாக்கு எண்ணிக்கையில் காலதாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்றும் முடிய 30 நிமிடம் முதல் 40 நிமிடங்கள் வரையும், வி.வி.பேட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரையும் ஆனது.
வாக்குகள் எண்ணிக்கையை தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சுப்பிரமணியன், தேர்தல் பொது பார்வையாளர்கள் முகிந்தர்பால், வீரபிரம்மையா மற்றும் வாக்கு எண்ணும் மைய மேற்பார்வையாளர்கள் கண்காணித்தனர். இதுதவிர வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஒவ்வொரு மேஜையும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட்டதோடு, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் வீடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story