பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வி ‘எனது கன்னத்தில் அறை விழுந்துள்ளது’ என கருத்து


பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வி ‘எனது கன்னத்தில் அறை விழுந்துள்ளது’ என கருத்து
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 9:26 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார். ‘எனது கன்னத்தில் அறை விழுந்துள்ளது’ என்று டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின்போது நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார். அவர் பின்னடைவில் இருந்ததால் சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி.மோகன் வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரிஸ்வான் ஹர்சத் பெற்றார். இதற்கு அடுத்த படியாக நடிகர் பிரகாஷ் ராஜ் 3-வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது. என் பாதையில் திட்டுதல், கேலி மற்றும் அவமானங்களை சந்திக்கிறேன். ஆனாலும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க தொடர்ந்து சண்டையிடுவேன். இதற்கான கடினமான பயணம் தற்போது தொடங்கி உள்ளது. இந்த பயணத்தில் என்னுடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்.

இவ்வாறு பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல் பெங்களூரு தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தோல்வி அடைந்தார்.


Next Story