மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஆட்சி தானாக கவிழும்; அதுவரை பொறுமையாக காத்திருப்பேன் - எடியூரப்பா பேட்டி + "||" + The rule in Karnataka will automatically fall; I will wait patiently - interview with Yeddyurappa

கர்நாடகத்தில் ஆட்சி தானாக கவிழும்; அதுவரை பொறுமையாக காத்திருப்பேன் - எடியூரப்பா பேட்டி

கர்நாடகத்தில் ஆட்சி தானாக கவிழும்; அதுவரை பொறுமையாக காத்திருப்பேன் - எடியூரப்பா பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் முடிவால் கூட்டணி தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு கர்நாடகத்தில் ஆட்சி தானாக கவிழும் என்றும் அதுவரை பொறுமையாக காத்திருப்பேன் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கர்நாடகத்தில் எதிர்பார்ப்புகளை மீறி 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் மத்திய மந்திரிகள் வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா, நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மண்டியாவில் முதல்–மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் தோல்வி அடைந்திருப்பது சந்தோ‌ஷமாக இருக்கிறது.

பிரதமர் என்று கூட பார்க்காமல் நரேந்திர மோடியை ஒருமையில் பேசிய ராகுல்காந்தி, சித்தராமையாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர். அவர்கள் இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு முகபங்கம் ஆகியுள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா வரலாற்று வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. பா.ஜனதாவின் ஓட்டு சதவீதம் 54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றினார்கள். அதற்கு 6½ கோடி மக்கள் பாடம் புகட்டி உள்ளனர். சிஞ்சோலி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. குந்துகோல் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி கவிழும் என்று முன்பு கூறி இருந்தேன். தற்போது 25 இடங்களில் எங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி மாற்றம் பற்றி தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் நிலை என்ன? என்பதை, அவர்கள் தான் கூற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் கர்நாடகத்தில் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களே மோதிக் கொண்டு ஒரு நிலைக்கு வருவார்கள். அவர்களது முடிவுக்காக பொறுமையாக காத்திருப்பேன். நாங்கள் எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சியின் தேசிய தலைவருடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுப்போம். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வருவார்களா? என்பது தெரியவில்லை. வந்தால் கட்சியில் சேர்த்து கொள்வோம். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எச்.விஸ்வநாத், பா.ஜனதாவுக்கு வந்தாலும் சேர்த்து கொள்வோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.