திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கே.சுப்பராயன் வெற்றி


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கே.சுப்பராயன் வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 10:15 PM GMT (Updated: 24 May 2019 12:11 AM GMT)

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை 93 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருப்பூர், 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கே.சுப்பராயன் உள்பட மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். கடந்த மாதம் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் 5 லட்சத்து 66 ஆயிரத்து 103 ஆண்கள், 5 லட்சத்து 49 ஆயிரத்து 480 பெண்கள், 27 திருநங்கைகள் என மொத்தம் 11 லட்சத்து 15 ஆயிரத்து 610 பேர் வாக்களித்தனர். இது 72.92 சதவீத வாக்குப்பதிவு ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் வைக்கப்பட்டு துணை ராணுவ வீரர்கள், மாநகர போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன.

வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஒரு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டு இருந்தன.

ஒரு மேஜைக்கு நுண்பார்வையாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் என 3 பேர் நியமிக்கப்பட்டனர். இதுபோல் தபால் வாக்கு எண்ணுவதற்கு 4 மேஜைகள் போடப்பட்டு இருந்தன. 1 மேஜைக்கு 4 பேர் வாக்கு எண்ணும் பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தலைமையில் 480 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். கல்லூரி நுழைவு வாயில் முன்பு போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் காலை 7.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டன.

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்பட்டு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

முதல் சுற்று முதலே இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கே.சுப்பராயன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றிலும் அவருடைய வாக்குகள் வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே சென்றன. 26 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கே.சுப்பராயன் 5 லட்சத்து 8 ஆயிரத்து 725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4 லட்சத்து 15 ஆயிரத்து 357 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். கே.சுப்பராயன், எம்.எஸ்.எம்.ஆனந்தனை விட 93 ஆயிரத்து 368 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை தனதாக்கினார்.

இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரியான திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று இரவு 8 மணிக்கு ஒலிபெருக்கியில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கே.சுப்பராயனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நடைபெற்ற தேர்தல் தீர்ப்பு, திருப்பூர் தொகுதியிலும் தமிழ்நாட்டிலும் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் தீர்ப்பின் மூலம் மக்கள் தெரிவித்திருப்பது என்னவென்றால் மோடி அலை எங்கெல்லாம் வீசியிருக்கிறதோ, அந்த அலை தமிழகத்தை தீண்ட முடியவில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். பெரியார் பிறந்த இந்த மண், திராவிட கருத்துகள் நிரம்பி இருப்பதால் மோடியின் வரணாசிரம கொள்கைக்கு எதிரான மண் தமிழக மண். மோடியின் ஜாலங்கள், ஏமாற்று நாடகங்கள் இங்கு அரங்கேறுவதில்லை என்பதை தேர்தல் தீர்ப்பு தெளிவாக காட்டியிருக்கிறது.

தி.மு.க. தலைமையில் அமைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மீது தமிழக வாக்காளர்கள் ஆழமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு பொருத்தமான பிரதிநிதிகளாக நாங்கள் செயல்படுவோம். இந்தியாவின் நிலைமை நன்றாக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் இருந்து பா.ஜனதாவின் ஒரு கிளை போல, பா.ஜனதாவின் இடங்களை அதிகப்படுத்தி தரக்கூடிய திரைமறைவு வேலைகளை செய்யும் ஒரு அமைப்பாக உருக்குலைக்கப்பட்டுவிட்டது. பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கக்கூடும் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.

திருப்பூர் தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். திருப்பூரில் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மக்களின் கருவியாக இருந்து மத்திய, மாநில அரசுகளிடம் மக்களின் தேவையை நிறைவேற்ற வாதாடுவேன்.போராடுவேன். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் கமிஷன் அடிக்கிற முறையை முற்றிலும் எதிர்த்து போராடுவேன். மக்களுக்கு ஒதுக்குகிற நிதி, சரியான முறையில் சென்றடைய பாடுபடுவேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி எனக்கு எதிராக வாக்களித்தவர்களும், அனைத்து மக்களுக்கும் கடமையாற்றுவேன். என் கட்சி, எனது குழு என்று செயல்படமாட்டேன். ஜனநாயக அரசியலமைப்பின் சாரத்தின்படி பொதுமக்களின் பிரதிநிதியாக செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கே.சுப்பராயன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கூடினார்கள். பின்னர் பட்டாசு வெடித்தும், கோஷங்கள் எழுப்பியபடி வெற்றியை கொண்டாடினார்கள். வாலிபர்கள் சிலர் கட்சி கொடிகளுடன் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த சுப்பராயனுக்கு, வெளியில் நின்று கொண்டிருந்த கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற கே.சுப்பராயன், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குமரன்சிலை எதிரே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அவரை சூழ்ந்து கொண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்ததுடன், மாலை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தனர். 

Next Story