திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில், ஒவ்வொரு சுற்று முடிவையும் ஒலிபெருக்கியில் அறிவித்த கலெக்டர்


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில், ஒவ்வொரு சுற்று முடிவையும் ஒலிபெருக்கியில் அறிவித்த கலெக்டர்
x
தினத்தந்தி 24 May 2019 4:00 AM IST (Updated: 24 May 2019 5:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒவ்வொரு சுற்று முடிவையும் ஒலிபெருக்கியில் கலெக்டர் அறிவிப்பு செய்தார்.

திருப்பூர், 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லுரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் காலை 7 மணிக்கு இருந்தனர். அதை தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தனர். அவர்கள் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. காலை 7.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு அறைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறையின் அருகே தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அந்த அறையில் 5 மேஜைகள் போடப்பட்டு இருந்தன. 4 மேஜைகளில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணப்பட்டன. ஒரு மேஜையில் படைவீரர்களின் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டன.

காலை 8 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. 3 பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட்டனர்.

ஒவ்வொரு சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மேற்பார்வையாளர்களிடம் கையெழுத்து பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு முடிவுகளை கொடுத்தனர். பின்னர் கலெக்டர் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தார். கலெக்டரின் அறையில் வேட்பாளர்களின் தலைமை முகவர்கள் இருந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்டார். வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு சுற்று முடிந்ததும் பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தன. 

Next Story