கடலூரில் தாமதமாக தொடங்கிய தபால் ஓட்டுகள் எண்ணும் பணி - முன்னணி நிலவரத்தை அறியமுடியாமல் மக்கள் தவித்தனர்
கடலூரில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது. இதனால் முன்னணி நிலவரங்களை அறிந்துகொள்ள முடியாமல் மக்கள் தவித்தனர்.
கடலூர்,
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில், முதலாவதாக தபால் ஓட்டுகளும், அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி காலை 8 மணி முதல் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி, முன்னணி நிலவரங்கள் வெளியாக தொடங்கின. ஆனால் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளானார்கள்.
ஏனெனில், கடலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில், பாதுகாக்கப்பட்ட அறையில் தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இவைகளை எண்ணுவதற்கு என்று அங்கு தனியாக 2 மேஜைகள் போடப்பட்டு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான தபால் ஓட்டுகளும் தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இந்த அறைகள், காலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்புசெல்வன், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன.
6 அறைகளையும், திறந்து, ஓட்டு எண்ணும் மேஜைக்கு எடுத்து வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனவே 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை 8.10 மணிக்கே தொடங்கியது. அதாவது சுமார் 10 நிமிடம் தாமதமாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதால், முன்னணி நிலவரங்கள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது. எனவே, கடலூர் தொகுதிக்கான, முன்னணி நிலவரங்கள் காலதாமதமாகவே பொதுமக்களை சென்றடைந்தது.
Related Tags :
Next Story