நெல்லிக்குப்பம் அருகே, சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய 3 பேர் கைது - தப்பி ஓடிய 7 பேருக்கு வலைவீச்சு


நெல்லிக்குப்பம் அருகே,  சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய 3 பேர் கைது - தப்பி ஓடிய 7 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 May 2019 3:15 AM IST (Updated: 24 May 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே சாக்குமூட்டைகளில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம், விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சாக்கு மூட்டைகளில் மணலை அள்ளி, அதை மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்வதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தென்பெண்ணை ஆற்று பகுதிக்கு விரைந்தனர்.

அப்போது, மேல்பட்டாம்பாக்கம், விஸ்வநாதபுரம் பகுதி ஆற்றில் 10-க்கும் மேற்பட்டவர்கள் சாக்குமூட்டைகளில் மணலை அள்ளிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர்.

அதற்குள் கடத்தல் காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து அவர்களை துரத்தி சென்ற போலீசார், 3 பேரை மட்டும் பிடித்தனர். மற்ற 7 பேரும் தப்பி சென்றுவிட்டனர். பிடிப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த மணி (வயது 23), இளவரசன் (24), பி.என். பாளையம் ஆனந்தன் (47) என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தங்களது 10 மோட்டார் சைக்கிள்களையும் ஆற்றிலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இவற்றை கைப்பற்றி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் எடுத்து வந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மணி உள்பட 3 பேரையும் கைது செய்து, 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story