குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகை- சாலை மறியல்
குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரி பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் கிராமம் முல்லை நகரில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் குடிநீர் பிரச்சினை தொடர்பாக விசாரிப்பதற்காக கீழக்கணவாய் கிராமத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதனை அறிந்த ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க கோரி காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரனை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் பெரம்பலூர்- செட்டிக்குளம் சாலையில் மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது முரளிதரன் உங்கள் தெருவிற்கு நாளை மறுநாள் (அதாவது நாளை) முதல் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, முற்றுகையையும், மறியலையும் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நிறைய பகுதிகளில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சாலை மறியலால் பெரம்பலூர்- செட்டிக்குளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story