குழந்தைகள் விற்பனை வழக்கு: நர்சு உள்பட 7 பேரின் காவல் நீட்டிப்பு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு


குழந்தைகள் விற்பனை வழக்கு: நர்சு உள்பட 7 பேரின் காவல் நீட்டிப்பு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 9:48 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நர்சு உள்பட 7 பேருக்கு அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நாமக்கல் கோர்ட்டு உத்தரவிட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த அமுதவள்ளியின் தம்பி நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நாமக்கல் கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி ஆகிய 7 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. இதையொட்டி அவர்கள் 7 பேரையும் போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவர்களின் நீதிமன்ற காவலை வருகிற ஜூன் மாதம் 6–ந் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு வடிவேல் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story