போட்டித்தேர்வுகளில் பங்கேற்க வசதியாக முள்ளுக்குறிச்சியில் இலவச பயிற்சி மையம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
போட்டித்தேர்வுகளில் பங்கேற்க வசதியாக முள்ளுக்குறிச்சியில் இலவச பயிற்சி மையம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
பழங்குடியின இனத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
பழங்குடியினர் நலத்துறை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையில் சேருவதை ஊக்குவிக்கும் விதத்திலும், டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே, வங்கி, டி.ஆர்.பி. ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க ஏதுவாகவும் நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் இலவச பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி மையத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின தகுதியான மாணவர்கள் பயிற்சி பெறலாம். அவர்களுக்கு 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதற்கான கையேடுகள் அனைத்தும் பயிற்சி மையத்தில் வழங்கப்படும். அதேபோல் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ள பழங்குடியின மாணவர்கள் நாமக்கல் மாவட்ட கொல்லிமலையில், பழங்குடியின திட்ட அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும், பழங்குடியின இனத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே, வங்கி, டி.ஆர்.பி. போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற ஏதுவாக இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.