கிருஷ்ணகிரியில் சூறைக்காற்றுக்கு சேதமான 90 மின்கம்பங்கள் மாற்றம் மேற்பார்வை பொறியாளர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையின் போது 90 மின்கம்பங்கள் சேதமானதை உடனடியாக மாற்றி, புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டதாக மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் அதிகளவில் மின்கம்பங்கள் உடைந்து சேதமானது. மின்வாரிய ஊழியர்கள் சேதமான மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்களை அமைத்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால் கூறியதாவது:– மாவட்டத்தில் அஞ்செட்டி, காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுக்கு 90 மின்கம்பங்கள் சேதமானது. இதனை தொடர்ந்து சேதமான மின்கம்பங்கள் அகற்றும் பணிகளில் ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு புதிய மின்கம்பங்கள் அமைத்தனர்.
மேலும், பல இடங்களில் சேதமான மின்வயர்களும் மாற்றப்பட்டது. காவேரிப்பட்டணம் பகுதிகளில் வயல்வெளிகளில் மின்கம்பங்கள் சேதமானதால், மாற்றிமைக்கும் பணிகள் சற்று தாமதமானது. அதுவும் 2 நாட்களில் சரி செய்யப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் இடி அல்லது மின்னலின் போது, குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் அடைய வேண்டாம், மின்சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டாம். மின்கம்பங்கள் சாய்ந்தால், வயர்கள் அறுந்து விழுந்து இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
கால்நடைகளை மின்கம்பத்திலோ, இழுவை கம்பியிலோ கட்ட வேண்டாம். மின்பாதிப்புகளை மின்சார ஊழியர்கள் மூலம் மட்டுமே சரி செய்ய வேண்டும். மின்நுகர்வோர்களே மின்உருகி இழை (பியூஸ்) மாற்றும் பொழுது உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயல்களில் மின்வேலிகள் அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களை அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.