கல்வி-அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுக்கான சான்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


கல்வி-அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுக்கான சான்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 25 May 2019 5:00 AM IST (Updated: 24 May 2019 10:20 PM IST)
t-max-icont-min-icon

பொதுப்பிரிவை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியோர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சான்றுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை, 

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

மத்திய அரசு பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் பொது பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, தமிழகத்தில் பொதுப்பிரிவை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வருமானம் மற்றும் சொத்து சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் ‘தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக்கான வரம்புக்குள் வராமல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் வருபவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற தகுதி உடையவர்கள் ஆவர். அதேசமயம், 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், 1000 சதுர அடிக்கு மேல் வீட்டுமனை வைத்திருப்பவர்கள், பட்டியலிடப்பட்ட சில நகராட்சி பகுதிகளில் 100 சதுர அடிக்கு மேல் வீட்டுமனை வைத்திருப்பவர்கள், மற்ற நகராட்சிகளில் 200 சதுர அடிக்கு மேல் வீட்டுமனை வைத்திருப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை பெற தகுதி இயலாதவர்கள் ஆவர்.

10 சதவீதம் இட ஒதுகீட்டுக்கான சான்றிதழ் பெறுவதற்கான வருமான சான்றிதழ் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் வருவாயை கணக்கிட்டே அளிக்க வேண்டும். அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஊதியம், விவசாயம், தொழில் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய்களும் கணக்கிடப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டின் வருமானத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். தாசில்தார்கள், அரசு வரையறை செய்து கொடுத்து உள்ள உரிய படிவங்களில் தான் வருவாய் மற்றும் சொத்து சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

இட ஒதுக்கீடு கோரும் குடும்பத்தின் சொத்து குறித்து தொடர்புடைய கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார்கள் மிகுந்த கவனத்துடன் விசாரணை மேற்கொண்டு இந்த சான்றிதழ்களை வழங்க வேண்டும். தாசில்தார் விண்ணப்பம் (இணைப்பு 1) மற்றும் விண்ணப்பதாரரின், சான்று உறுதி அலுவலர் முன் பெறப்பட்ட சுயஉறுதி மொழி ஆவணம் (இணைப்பு 2) ஆகியவற்றை பெற வேண்டும். சான்றிதழ் வழங்கப்பட்ட உடனே மாவட்ட இணையத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, தகுதியுடைய பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பம் செய்து மேற்கண்ட சான்றுகளை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story