சேலம் மாநகரில் 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது


சேலம் மாநகரில் 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 24 May 2019 10:15 PM GMT (Updated: 24 May 2019 5:32 PM GMT)

சேலம் மாநகரில் இதுவரை 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம், 

சேலம் மாநகர, மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதாவது, பெண்களிடம் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ரவுடிகள், திருட்டு சி.டி.க்கள் தயாரிப்பவர்கள் சாராய கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஓராண்டு சிறையில் இருந்து வெளிவராமல் இருக்க குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்கிறார்கள். அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பரிசீலனை செய்து கமிஷனர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கிறார்.

அதன்படி சேலம் மாநகரில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நேற்று முன்தினம் வரை 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டை விட 4 பேர் குறைவாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story