சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி: தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி: தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 May 2019 3:45 AM IST (Updated: 24 May 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

பின்னர் ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தை அலுவலர்கள் உடனுக்குடன் அறிவித்தனர். அதன்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலை வகித்தார். இதே நிலை தொடர்ந்து நீடித்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் வெற்றிமுகத்தில் இருப்பதை அறிந்து கொண்ட தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் வாக்கு எண்ணும் மையம் முன்பு திரண்டனர். பின்னர் ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.

அதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி, அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து கட்சி தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது அவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சேலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Next Story