சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 3-வது இடம் பிடித்த மக்கள் நீதி மய்யம்


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 3-வது இடம் பிடித்த மக்கள் நீதி மய்யம்
x
தினத்தந்தி 24 May 2019 9:45 PM GMT (Updated: 24 May 2019 5:39 PM GMT)

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3-வது இடம் பிடித்துள்ளது. அ.ம.மு.க. வேட்பாளருக்கு 4-வது இடம் கிடைத்தது.

சேலம், 

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவியது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இணையாக அ.ம.மு.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. குறிப்பாக சேலம் மாவட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் என்பதால் அ.ம.மு.க.வினர் ஆரம்பம் முதலே கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அக்கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வான வீரபாண்டி எஸ்.கே.செல்வம் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

இதனால் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க.வுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாக அமைந்திருந்தது. அதாவது, ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரம் 3-வது இடத்தில் இருந்த அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.கே.செல்வம், அதன்பிறகு 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த படியாக 3-வது இடத்தை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் பிடித்தார்.

சட்டமன்ற தொகுதிகளான ஓமலூரில் 3,818, எடப்பாடியில் 3,391, சேலம் மேற்கு தொகுதியில் 11,352, சேலம் வடக்கு தொகுதியில் 16,502, சேலம் தெற்கு தொகுதியில் 17,418, வீரபாண்டியில் 5,991 மற்றும் 190 தபால் ஓட்டுகள் என மொத்தம் 58 ஆயிரத்து 662 வாக்குகள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டனுக்கு கிடைத்தது. இதேபோல், அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 80 தபால் ஓட்டுகள் உள்பட 52 ஆயிரத்து 332 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

அதாவது, அ.ம.மு.க. வேட்பாளரை விட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரபு மணிகண்டன் 6 ஆயிரத்து 330 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க.வை தொடர்ந்து 5-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசாவுக்கு 33 ஆயிரத்து 890 ஓட்டுகள் கிடைத்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரை தவிர மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்.

Next Story