பில்லூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் இந்த அணையின் தண்ணீர் மூலம் புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய நகராட்சிகள், பவானிசாகர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 25–க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் மேலும் நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகள் குடிநீர் வசதி பெறுகிறது. பருவ மழை பொய்த்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக கடந்த 22–ந் தேதி பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அன்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 886 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 53.10 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
நேற்று முன்தினம் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 547 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 53.21 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 253 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 53.30 அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.