ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 14 ஆயிரத்து 795 வாக்குகள் 6–வது இடத்தை பிடித்தது


ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 14 ஆயிரத்து 795 வாக்குகள் 6–வது இடத்தை பிடித்தது
x
தினத்தந்தி 25 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நோட்டா 14 ஆயிரத்து 795 வாக்குகள் பெற்று 6–வது இடத்தை பிடித்தது.

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகள் என 20 பேர் போட்டியிட்டனர். இந்த 20 பேருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக 21–வது வரிசை எண்ணில் ‘நோட்டா’ (இவர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) என்கிற பொத்தான் வைக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. முதல் சுற்று எண்ணிக்கையிலேயே பல சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி அதிக வாக்குகளை நோட்டா பெற்று இருந்தது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நோட்டா 737 ஓட்டுகள் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சுற்றிலும் இந்த எண்ணிக்கை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வந்தது.

23–வது சுற்று எண்ணிக்கையின் போது ஈரோடு மேற்கு தொகுதியின் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன. இதில் 9 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்காத நிலையில் நோட்டா 5 வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல் தபால் ஓட்டுகளிலும் நோட்ட 99 வாக்குகள் பெற்று இருந்தது. ஒட்டு மொத்தமாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நோட்டா மொத்தம் 14 ஆயிரத்து 795 வாக்குகள் பெற்று வரிசைப்படி 6–வது இடத்தை பிடித்து உள்ளது.

அதிக பட்சமாக 5 லட்சத்து 63 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்ற அ.கணேசமூர்த்தி எம்.பி.யாக தேர்வு பெற்றார். இதன் மூலம் தி.மு.க. முதல் இடத்தை பிடித்தது. அவருக்கு அடுத்தபடியாக 3 லட்சத்து 52 ஆயிரத்து 973 வாக்குகள் பெற்ற ஜி.மணிமாறன் 2–ம் இடத்தை பிடித்ததால், அ.தி.மு.க.வும் 2–ம் இடத்தை பிடித்தது.

இந்த 2 கட்சிகளில் ஏதேனும் ஒன்றுதான் முதல் இடம் பிடிக்கும் என்று வாக்காளர்கள் அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் 3–வது இடத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வரும் என்று அனைவரும் கூறிய நிலையில், அதிரடியாக அந்த கட்சியை பின்னுக்கு தள்ளி மக்கள் நீதி மய்யம் 3–ம் இடத்தை பிடித்தது.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஏ.சரவணக்குமார் 47 ஆயிரத்து 719 வாக்குகள் பெற்று இருக்கிறார். இதன் மூலம் 3–ம் இடத்துக்கு உரிய வேட்பாளராக அவர் உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி 39 ஆயிரத்து 10 வாக்குகள் பெற்றதன் மூலம் 4–ம் இடத்தை பிடித்தார். தபால் வாக்குகளில் மக்கள் நீதி மய்யத்தை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்று இருக்கிறது. நாம்தமிழர் கட்சி பெற்ற தபால் ஓட்டுகள் 161. மக்கள் நீதி மய்யம் பெற்றது 145 வாக்குகள். அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர் கே.சி.செந்தில்குமாருக்கு 25 ஆயிரத்து 858 வாக்குகள் மூலம் 5–ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

தேசியக்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எம்.கோபால் 4 ஆயிரத்து 138 வாக்குகள் பெற்று உள்ளார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான உழைப்பாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் பி.குப்புசாமி 3 ஆயிரத்து 379 வாக்குகள் பெற்று இருக்கிறார். இந்திய கணசங்கம் கட்சியின் வேட்பாளர் ஆர்.குப்புசாமி 1,603 ஓட்டுகள் மட்டுமே பெற்று இருந்தார்.

சுயேச்சை வேட்பாளர் எஸ்.தர்மலிங்கம் என்பவர் 2 ஆயிரத்து 455 வாக்குகள் பெற்று சுயேச்சைகளில் அதிக வாக்குகள் பெற்றவராக உள்ளார். எஸ்.ஆனந்தி என்பவர் 485 வாக்குகள் பெற்று குறைந்த வாக்குகள் பெற்றவராக உள்ளார்.

நோட்டா செல்லுபடியாகாத ஓட்டுகள் தவிர்த்து ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 53 ஆயிரத்து 68 வாக்குகளே வேட்பாளர்கள் பெற்றிருந்தனர்.


Next Story