கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கோட்டையை காங்கிரசின் ‘கை’ உடைத்தது
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கோட்டையை காங்கிரசின் ‘கை’ உடைத்தது. 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொகுதியை காங்கிரஸ் தன் வசமாக்கியது.
கரூர்,
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரையை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் அ.தி.மு.க. கோட்டையாக இருந்த கரூர் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி உடைத்தெறிந்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட வெற்றி வாகை சூடி தொகுதியை மீண்டும் தன்வசமாக்கியது.
கரூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1957-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பெரியசாமி கவுண்டரும், 1962- தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராமநாதன் செட்டியாரும் வெற்றிவாகை சூடினர். 1967-ல் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்ட முத்துசாமி கவுண்டர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் 1971, 1977-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலும், 1980, 1984-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.ஆர்.முருகை யாவும் வெற்றி பெற்றிருந்தனர்.
கடந்த 1971 முதல் 1984-ம் நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. கடந்த 1989-ல் இருந்து கரூர் தொகுதியில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்தது. 1989-ல் தம்பிதுரை (அ.தி.மு.க.), 1991-ல் முருகேசன் (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியை சேர்ந்த கே.நாட்ராயன் வெற்றி பெற்றிருந்தார். 1998-ல் தம்பிதுரையும், 1999-ல் ம.சின்னசாமியும் (அ.தி.மு.க.) வெற்றி பெற்றிருந்தனர்.
2004-ல் தி.மு.க.வை சேர்ந்த கே.சி.பழனிசாமி வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் 2009 மற்றும் 2014-ல் நடந்த தேர்தல்களில் தம்பிதுரை போட்டியிட்டு வெற்றி பெற்றார். முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றி மற்றும் கடந்த 2009, 2014-ம் ஆண்டு வெற்றிகளின் மூலம் கரூர் தொகுதியை அ.தி.மு.க. தனது கோட்டையாக வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த கோட்டையை யாரும் எதிர்பார்க்காத வகையில் தி.மு.க. கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி தவிடுபொடியாக்கியது.
கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது தம்பிதுரையை விட ஜோதிமணி இரு மடங்குகள் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். ஒரு சுற்றில் கூட ஜோதிமணியை தம்பிதுரை முந்தவில்லை. அனைத்து சுற்றுகளும் அவருக்கு இறங்குமுகமாகியது. கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர், விராலிமலை சட்டமன்ற தொகுதிகளில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டதில் தம்பிதுரைக்கு பெரிய அளவில் வாக்குகள் பதிவாகவில்லை.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தோல்வி அடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறதில் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் பங்கும் நிறைந்திருக்கிறது. அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்ற செந்தில்பாலாஜி அங்கிருந்து தாவி தி.மு.க.வுக்கு சென்றார். அங்கு அவர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்ட பின் தேர்தல் பிரசாரத்தில் ஜோதிமணிக்காக தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதன் ஒருபகுதியாகவும் காங்கிரஸ் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
Related Tags :
Next Story