வைத்திலிங்கத்தின் அரசியல் அனுபவம் மாநில வளர்ச்சிக்கு துணை நிற்கும் - ராதாகிருஷ்ணன் அறிக்கை


வைத்திலிங்கத்தின் அரசியல் அனுபவம் மாநில வளர்ச்சிக்கு துணை நிற்கும் - ராதாகிருஷ்ணன் அறிக்கை
x
தினத்தந்தி 25 May 2019 4:00 AM IST (Updated: 25 May 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

வைத்திலிங்கத்தின் அரசியல் அனுபவம் புதுவை மாநில வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்று ராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

 புதுவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014–ம் ஆண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராதாகிருஷ்ணன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பாராளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது கடந்த 5 ஆண்டு கால ஆட்சிக்கு தேச மக்கள் அளித்த நற்சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது. மக்களின் எண்ணப்படி பாரதீய ஜனதா பல்வேறு மாநிலங்களில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளன. இதற்கு காரணமான தி.மு.க. தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு என் நல்வாழ்த்துக்கள். இதேபோன்று புதுவையில் சிறந்த வெற்றியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கத்துக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

8 முறை எம்.எல்.ஏ.வாகவும், முதல்–அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகராக என பதவி வகித்துள்ள அனுபவம் மிக்கவரான அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அவருடைய அரசியல் அனுபவம் நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் துணைநிற்கும் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டு காலம் எம்.பி.யாக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, என்னை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய புதுவை மாநில வாக்காளர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். நான் எம்.பி.யாக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களையும், மேம்பாட்டு நிதியையும் மாநில வளர்ச்சிக்காக அளித்துள்ளேன். என் பணிக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story